Friday, 9 January 2015

சாதனையாளருக்குப் பின்னால்

 
 
 
# இந்தியக் கிரிக்கெட்டின் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ எனக் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், 

# இந்திய மண்ணின் மைந்தர்களால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் விப்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் அசிம் பிரேம்ஜி, 

# பாலிவுட் திரைப்பட உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆமிர் கான், 

# பெண்களுக்கான சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பலவற்றில் முதல் பரிசு வென்று, பத்மபூஷண், அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர் இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனை மேரி காம், 

# ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி 

இவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறதா?
 
இவர்கள் அனைவரும் இந்தியர்கள், அவர்களுடைய துறைகளில் மாபெரும் சாதனைகள் படைத்தவர்கள். அதே நேரத்தில் இவர்கள் அனைவரும் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டு நின்றவர்கள். 


கல்வி தேவையா?
 
வாழ்வில் வெற்றி பெறக் கல்வி அவசியமில்லை எனச் சொல்வதற்காக இவர்களைப் பட்டியல் போடவில்லை. அது மிகத் தவறான பார்வையும்கூட. கல்வி என்பது தனிமனித உரிமையாகும். 

40 சதவீத இந்தியக் குழந்தைகள் எட்டாம் வகுப்பு படிப்பை முடிக்கும் முன்னரே படிக்கும் வாய்ப்பை இழக்கும் கொடுமையான சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்கிறது 2014-ல் யூனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவு. 

அதற்குச் சமூக, பொருளாதார அமைப்பில் இருக்கும் பல சிக்கல்கள் காரணமாக இருக்கின்றன. ஆனால் அவை அல்லாமலும் ஒரு அச்சுறுத்தும் சிக்கல் நிலவுகிறது. அதுதான் வித்தியாசமான அறிவுடையவர்களை அணுகும்விதம். 

வித்தியாசம்தான் சிக்கலா?
 
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றுத்திறனாளியாக இருப்பவர்களுக்கும் உரிய மதிப்பும், அங்கீகாரமும் அளிக்கப்பட வேண்டும் எனச் சொல்லும் நாம் மாற்று அறிவு கொண்டவர்களையும் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா! 

ஆரம்பத்தில் பட்டியலிடப் பட்ட ஆளுமைகள் அப்படிப்பட்டவர்கள்தான். இவர்களுடைய கல்வியைத் துண்டித்தது எது? பொருளாதார நெருக்கடியோ, சமூகச் சூழலோ அல்ல. வழக்கமான கல்வித் திட்டம் என்ற சட்டகத்துக்குள் பொருந்தாதவர்களாகத் திகழ்ந்ததே காரணம். 

ஆனால் அதே சமயம் கல்விக் கூடங்களில் சராசரியான மதிப்பெண்கள் பெறவே தத்தளித்த இவர்கள் எப்படி அனைவரும் வியந்து பார்க்கும் ஆளுமைகளாகப் பரிணமித்தார்கள் என்ற கேள்வியும் உள்ளது. வாருங்கள்! கார்டனர், கில்ஃபோர்ட், டன் அண்ட் டன் போன்ற கல்வி மற்றும் உளவியல் நிபுணர்களின் துணையோடு இந்தக் கேள்விக்கான விடையைக் காண்போம். 

குவிந்தல்ல விரிந்து
 
கற்றுக் கொடுக்கப்படும் கருத்துகளைக் கோர்வையாக மனதில் பதித்துப் பின்னர் ஒப்பிப்பது, மற்றும் எழுதுவது இவற்றைத்தான் நம் கல்வி கூடங்கள் மாணவர்களிடம் எதிர்பார்க்கின்றன. இத்தகைய ஆற்றல் மொழி மற்றும் கணிதத்திறன் கொண்டவர்களிடம் இயல்பாக இருக்கும். 

அவர்களால் வகுப்பில் சொல்லித்தரப்படும் பாடங்களைப் பின் தொடர்ந்து, படித்துப் பின் படிப்படியாக எழுத முடியும். ஆனால் உடல் ரீதியான அறிவுத்திறன் மற்றும் காட்சி ரீதியான அறிவுத்திறன் கொண்டவர்களால் இப்படிப் படிக்க முடியாது. 

அதிலும் காட்சி ரீதியான அறிவுத்திறன் கொண்டவர்களால் ஒரு கருத்தைக் காட்சியாகப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள முடியும்.

 புவியியல், வடிவியல், மெக்கானிக்கல், கட்டுமான வேலைகள், வரைபடம் வரைதல் என இடம், வெளி தொடர்பான விஷயங்களில் பிச்சு உதறுவார்கள். ஆனால் இலக்கணம், கணினி சூத்திரம், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களின் சூத்திரங்களில் தடுமாறுவார்கள். புத்தகப் பாடங்களில் இடறுவார்கள். ஆனால் செயல்முறை பாடத்தில் அசத்துவார்கள். 

இவர்களுடைய மூளை இயங்கும் போது ஒரே ஒரு விஷயத்தில் குவிந்து செயல்படாது. மாறாகப் பரந்து விரிந்து காட்சிப்படுத்திச் செயல்படும். 

தோல்வி ஆனால் வெற்றி
 
அறிவை அளவிடும் முறையான ஐ கியூ தேர்வில், விஐகியூ (Verba#Intelligent Quotient (VIQ) எனப்படும் மொழி மற்றும் கணித அறிவுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் வகுப்பில் முதலிடம் பெறுகிறார்கள். 

ஆனால் வெளி உலகில் வெற்றி பெற விஐ கியூ மட்டும் போதாது. அங்குத் தேவை செயல்திறன் அடிப்படையிலான ஐகியூதான். இதை ஆங்கிலத்தில்
Performance Intelligence Quotient (PIQ) என்கிறார்கள். இந்தப் பிஐகியூ என்பது மொழி அறிவுத்திறன் மட்டுமே உடையவர்களைக் காட்டிலும் காட்சி ரீதியான அறிவுடையவர்களிடம் அதிக அளவில் காணப்படும்.

 அதனால்தான் வழக்கமான படிப்பில் பின்தங்கியிருந்த
பலர் நிஜ உலகில் ஜொலிக் கிறார்கள். 

அப்படிப்பட்ட பிஐ கியூவை வளர்த்தெடுக்கும் வகையில் நம் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவந்தால் நம் கல்விக் கூடங்களுக்குள்ளேயே சச்சினும், ஆமிர் கானும், அசிம் பிரேம்ஜியும், மேரி காமும், முகேஷ் அம்பானியும் உருவெடுப்பார்கள்.

தன் விவரமா, வாழ்க்கைப் போக்கா? - ஆங்கிலம் அறிவோமே

 
 
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பற்றி “அவர் ரொம்ப shrewd’’ என்று பேசிக் கொள்கிறார்களா? அப்படியானால் நீங்கள் பாராட்டப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு நிறைய presence of mind இருக்கிறது. புத்திசாலித்தனம், விழிப்புணர்வு இரண்டும் கொண்டவர் நீங்கள். 
ஆனால் நீங்கள் ஒரு பெண்மணியாக இருந்து யாராவது உங்களை shrew என்று கூறினால் (முன்பு குறிப்பிட்ட வார்த்தையின் கடைசி எழுத்து இல்லை என்பதைக் கவனியுங்கள்) “ரொம்ப தாங்க்ஸ்’’ என்று அசட்டுத்தனமாகச் சொல்லி விடாதீர்கள். அது எதிர்மறை அர்த்தத்தை அளிக்கும் வார்த்தை. கொஞ்சம் ராட்சசத்தனமான, எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் பெண்மணியைத்தான் shrew என்பார்கள். 
Shrewd, shrew ஆகிய வார்த்தைகளைக் குறிப்பிடும்போது விநாயகரின் வாகனமும் நினைவுக்கு வருகிறது. ஏன் என்பதைக் கூற முடியுமா? விடையைப் பிறகு உறுதி செய்து கொள்ளலாம். 
வித்தியாசம் 
 
இளைஞர்கள் பலருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் உண்டாகி இருக்கக் கூடிய ஒரு சந்தேகம் இது. Bio-data, C.V, Resume ஆகிய மூன்றும் ஒன்றுதானா? அப்படியில்லை என்றால் அவற்றுக்கிடையே என்ன வித்தியாசம்?
Bio-data என்பது Biographical data என்பதன் சுருக்கம்.
இதில் தன்னைப் பற்றிய விவரங்களை ஒருவர் பதிவுசெய்து கொள்வார். பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி, நாடு போன்ற விவரங்களும் இவற்றைத் தொடர்ந்து கல்வி மற்றும் பணி தகுதிகள் ஆகியவை வருட வாரியாகவும் இடம் பெறும். 
ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க, ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க நாம் அளிப்பதெல்லாம் bio-dataதான். என்ன, அச்சிட்ட தாள்களில் தேவைப்படும் விவரங்களைக் கேட்கிறார்கள், நிரப்புகிறோம், அவ்வளவுதான். 
C.V என்பதன் விரிவு Curriculum Vitae. இவை லத்தீன் வார்த்தைகள். “வாழ்க்கைப் போக்கு’’ (Course of life) என்பது இதன் பொருள். 
Resume என்பது ஒரு பிரெஞ்ச் வார்த்தை. இதன் பொருள் summary என்பதாகும்.
பொதுவாக C.V என்பதும் Resume என்பதும் ஒன்றுதான். ஆனால் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. 
Resume என்பது அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் கொண்டதாக இருக்கும். இதிலுள்ள குறிப்புகள் ஏதோ மூன்றாவது மனிதரைப்பற்றி விவரிப்பதுபோல் இருக்கும். (Has secured first rank, Has participated in the cultural events என்பதுபோல). 
C.V என்பது தேவைக்கேற்ப அதிகப் பக்கங்களைக் கொண்டதாக அமையலாம். நான்கு பக்கங்கள்கூட இருக்கலாம். கல்வி, பணி அனுபவங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் விவரிக்கப்படும். 
எப்போது C.V.? எப்போது Resume? 
 
C.V என்பது உங்களைப் பற்றிய பொதுவான கருத்தை உருவாக்கப் பயன்படுகிறது. Resume என்பது குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் எவ்வளவு தகுதியானவர் என்பதை உணர்த்தும் முயற்சி. 
வீட்டிலும் சிங்கம் 
 
விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. மூஞ்சூறுக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை? Shrew என்பதுதான். (Rat, Mouse ஆகியவை எலியைக் குறிக்கின்றன).
பெருச்சாளிக்கு ஆங்கிலத்தில் என்ன? கார்ட்டூனில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். 
கார்ட்டூனுக்கான ஐடியாவை உருவாக்கியபோது நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது. அதைக் கொஞ்சம் மாற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே. 
தன் அலுவலகச் சகாக்களிடம் ஒருவர் “நான் valiant, valorous, intrepid, audacious’’ என்றாராம். அதைக் கேட்ட ஒருவர், “சார் நீங்க ஆபீஸிலே சிங்கம்தான், வீட்ல எப்படி?’’ என்றாராம். அதற்கு அவர் “வீட்டிலும் நான் சிங்கம்தான்’’ என்று கூறிவிட்டு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு “ஆனால் என் மனைவி துர்க்கை. 
என்மேலே உட்கார்ந்து அதிகாரம் பண்ணுவாங்க’’ என்றாராம். (அவர் தன்னைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டுக்கொண்ட நான்கு ஆங்கில வார்த்தைகளும் துணிவைக் குறிக்கின்றன என்பதை இந்நேரம் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்). 
சிவபெருமானின் வாகனம் எது? உங்கள் விடையை ஆங்கிலத்தில் கூற வேண்டும்.. 
 
பசுவும் எருமையும் 
 
அதற்கு முன்னால் Cow என்றால் என்ன? Buffalo என்றால் என்ன? Ox என்றால் என்ன? Bull என்றால் என்ன? Bullock என்றால் என்ன? சொல்லுங்கள். 
(இப்போது சிலருக்குச் சின்னதாக ஒரு குழப்பம் வந்திருக்கலாம் கடைசி மூன்றில் எது சிவனின் வாகனம் என்று). 
முதலில் cow என்றால் எது என்பதைத் தெரிந்து கொண்டுவிடுவோம். இதென்ன அசட்டுத்தனம், cow என்றால் பசுமாடுதானே என்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். வளர்ச்சி முழுமையடைந்துவிட்ட பல பெரிய பெண் விலங்குகளை cow என்று குறிப்பிடுவதுண்டு. 
வளர்ச்சியடைந்த பெண் யானை, பெண் திமிங்கிலம் ஆகியவற்றையும்கூட cow என்பதுண்டு. சந்தேகம் எதற்கு என்பதற்காக cow elephant, cow whale என்றும் சிலர் கூறுவார்கள். 
Buffalo என்றால் எருமை. 
எருது என்றால் என்ன? உங்கள் பதில் Ox என்பதா? Bull என்பதா? அல்லது இரண்டு வார்த்தைகளும் சரிதான் என்பதா? (குழப்பம் அடைபவர்கள் கவலைப்பட வேண்டாம். சின்ன வயதில் எருமையை ஆண் என்றும் பசுவைப் பெண் என்றும் அப்பாவித்தனமாக எண்ணியவர்கள் உண்டு. அப்படிக் கூடவா இருப்பார்கள் என்று கேட்காதீர்கள். 
Ox என்றால் மாடு. மாட்டு வண்டியில் பூட்டப்படுவது oxதான். (Ox என்பதன் பன்மை Oxen). ஆஸ்திரேலியாவில் (இந்தியாவிலும் கூடத்தான்) இதை bullock என்பார்கள். Bullock cart என்றால் மாட்டு வண்டி. நிலத்தை உழப் பயன்படும் எருது என்பதும் oxதான். 
பெரும்பாலும் ox எனும் விலங்கின் இனப்பெருக்கச் சக்தியை மருத்துவத்தின் மூலம் நீக்கிவிடுவது வழக்கம். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமாம். 
Bull என்பது காளை. Bison என்றும் கூறுவார்கள். ஸ்பெயினில் புகழ்பெற்ற Bull fighting என்ற விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? ஜல்லிக்கட்டும்தான். ஆகச் சிவனின் வாகனம் bullதான். 
இன்னமும் விளங்காதவர்கள் ‘ஆ’ என அலறலாம். அல்லது ‘கோ’ என்று கண்ணீர் விடலாம். ஆனால் ஆ, கோ என்ற தமிழ் வார்த்தைகள் பசுவை மட்டும் குறிக்கிறதா? அல்லது பால் தரும் விலங்கு எதையும் குறிக்கிறதா என்று கேட்டுவிடாதீர்கள்.

திருநங்கைகளின் தோழி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் விருது பெறும் ஷீத்தல் நாயக்.  

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் விருது பெறும் ஷீத்தல் நாயக்.
பிறக்கும்போது ஆணாகப் பிறந்த ஒருவர் இடையில் பெண்ணாக மாறினால் திருநங்கை என அழைக்கிறோம். அப்படி மாறுபவர்கள் உடல்ரீதியாகவும் முழுமையாக தங்களை பெண்களாக மாற்றிக்கொள்வதற்கு சரியான மாற்று அறுவைச் சிகிச்சை முறை தற்போது இந்தியாவில் இல்லை. 

தரமற்ற அறுவைச் சிகிச்சைகளை செய்தவர்கள் பின்விளைவுகளால் துன்பப்படுகின்றனர். 

சமீபத்தில் திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம்பாலினத்தவருக்கு என தனியாக ஒரு மருத்துவப் பிரிவு புதுச்சேரியின் மகாத்மா காந்தி மருத்துவமனையில் இந்தியாவில் முதன் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஐந்து திருநங்கைகளும் பணியாற்றுகின்றனர். 

இத்தகைய முன்னேற்றத்துக்காக உழைத்தவர்களில் முக்கியமானவர் ஷீத்தல் நாயக் எனும் ஒரு திருநங்கை. திருநங்கைகளின் வாழ்வுரிமைகளுக்காக புதுச்சேரியில் செயல்படுபவர். 

அவர் புதுச்சேரியில் பிறந்தவர். பள்ளிப் பருவம் முதல் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர். இன்னல்களுக்கு மத்தியில் கோவா பொறியியல் கல்லூரியில் கப்பல்கட்டும் பொறியியலைப் படித்து முடித்தார். 

திருப்பு முனை
 
இந்தக் காலகட்டத்தில் அவர் வேகமாக ஒரு திருநங்கையாக மாறினார். அவரது மாற்றங்களைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நெருங்கிய நண்பர்கள் கூட ஒதுக்க ஆரம்பித்தனர். 

நெருக்கடியால் வீட்டை விட்டு வெளியேறினார். புதுச்சேரியில் ஒரு உணவுவிடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். 

இந்த காலகட்டத்தில் கப்பல்கட்டும் பொறியியல் படிப்பு சார்ந்த வேலைக்கு மாதம் ரூபாய் ஒன்றரைலட்சம் சம்பளத்தோடு ஒரு வேலை வாய்ப்பு வந்தது. அதைப் புறக்கணித்துவிட்டு, திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வுரிமைகளைப் பெற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். 

இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன என கேட்டதற்கு அவர் “ புதுவை பூங்காவில் ஒரு வாலிபன் பணம் தருவதாகக் கூறி அழைத்துப் பின்னர் காசு தராமல் ஒரு திருநங்கையை அடிப்பதைக் கண்டு கோபமடைந்தேன். நான் பணிபுரிந்த விடுதிக்குப் பிச்சை கேட்டு வந்த திருநங்கையை காவலாளி அடித்து விரட்டியதையும் கண்டேன். 

பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு திருநங்கை என்னிடம் “எனக்கென்று யாரும் இல்லை” என்றாள். “நானிருக்கிறேன்” என்றேன்.

 அதுவே என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. நான் அந்த வேலைக்குப் போயிருந்தால் இந்த சமூகப்பணிகளைச் செய்திருக்க முடியாது” என்றார். 

முதலமைச்சர் விருது
 
இவர் 2003-ஆம் ஆண்டு திருநங்கைகள் மத்தியில் பால்வினை நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளார். 2005-ஆம் ஆண்டு “சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். 


திருநங்கைகளுக்கு என தனியான சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்துள்ளார். படித்த, திறமையான திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்புகளை ஒருங்கிணைக்கிறார். அரசாங்கத்திடம் போராடி, குடும்ப அட்டை , வாக்காளர் அடையாள அட்டை போன்ற அங்கீகாரங்களைப் பெற்றுத் தந்துள்ளார்.


“திருநங்கையர் திரைப்படத் திருவிழா-2014” நடத்தி உள்ளார். இத்தகையப் பணிகளுக்காக 2010-ஆண்டின் சிறந்த நிறுவனத்துக்கான விருதை முதலமைச்சர் ரங்கசாமியிடமிருந்து பெற்றுள்ளார். 

புதுவை மாநில திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவியாக “நாயக்” எனும் பட்டம் பெற்றுள்ளார். 

சென்ற ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு திருநங்கைகளின் நிலை குறித்துப் பேசினார். 

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து அவர்களுக் கான உரிமைகளை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை உடனடியாக அமலாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் ஷீத்தல், வீட்டை விட்டு ஓடிவரும் திருநங்கைகளை பாதுகாக்க தனி இல்லம் அமைக்க வேண்டும் என்கிறார். 

 திருநங்கைகள் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்வதையும் சட்டம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். அவரை 9894455200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆசிரியரை கேள்வி கேட்கலாமா?

 
 
 
காப்பிய நாயகரான ராமரின் குரு விசுவாமித்திரர். அர்ஜுனனுக்கு துரோணர். மாவீரன் அலெக்சாண்டருக்கு அரிஸ்டாட்டில். இவர்கள் அனைவரும் முக்கியத்துவம் பெற அடிப்படைக் காரணம் குரு - சிஷ்யன் உறவு.
ஆசிரியர்கள் உலகின் வழிகாட்டிகள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது, நமக்குத் துணை நிற்கும். 

ஆசிரியர்களிடம் பயத்தை விட்டொழிக்க வேண்டும். கேள்வி கேட்பது சந்தேகத்தை வெளிப்படுத்தவும், பதில் சொல்வது ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையை உணர்த்தும். 

ஆசிரியரிடம் பேசுவதற்கு முன்பாக பேச இருக்கும் விஷயத்தை நன்கு யோசித்து, அதன் விளைவுகளையும், தெரிந்துகொண்டு அணுகலாம். பேசுவதற்கான நல்ல சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விஷயத்தைப் பொறுத்து வகுப்பறையிலோ, ஆசிரியர்களுக்கான அறையிலோ பேசலாம்.
எந்தச் சூழ்நிலையிலும் பொய் பேசக்கூடாது. இயல்பாக இருக்க வேண்டும். நல்ல பெயர் வாங்க குணாதிசயங்களைச் செயற்கையாக மாற்றிக் கொள்ளக்கூடாது. 

அவர் உங்களை விமர்சனம் செய்தாலோ அல்லது குறைகூறினாலோ தவறாக நினைக்க வேண்டாம். ஒரு மாணவனைப் பற்றியோ மற்ற ஆசிரியர்களைப் பற்றியோ குறை கூற வேண்டாம். 

நேற்று நடத்திய பாடங்களைப் பற்றி ஆசிரியர் கேட்கும்போது எதைப் புரிந்து கொண்டீர்கள், எது உங்களுக்குச் சவாலாக அமைந்தது என்று கூறுங்கள்.
உங்களுடைய கண், உடல் மொழி அவரிடம் பேசுவதில் உள்ள அக்கறையை வெளிப்படுத்த வேண்டும். 

அதேபோல நீங்கள் கையாள்கிற மொழியில் சிக்கல் இருக்கலாம். எந்த மொழியில் பேசப் போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருங்கள். உங்களுடைய நடை, உடை, பேச்சு, பாவனை எல்லாமே படிப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம் என்று வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். 

நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றியது ஆசிரியர்கள்தான். பெரும் தலைவர்கள் பெரும்பாலோர் ஆசிரியர்களே. அது மட்டுமல்ல, உங்களுடைய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது நீங்களும் ஆசிரியர்கள்தான்.

Thursday, 1 January 2015

தேர்வைக் கொண்டாடுவோம்

 
 
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்காக, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் நடந்த ‘தேர்வைக் கொண்டாடுவோம்’ நிகழ்ச்சியில் உற்சாகம் பொங்கி வழிந்தது. 

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ‘லீட் இந்தியா 2020’ எனும் தேசிய இயக்கத்தை நடத்துகிறார். அதன் சார்பில் நடிகர் தாமு இதில் பங்கேற்றார்.
‘மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே இடத்தில் பார்க்கிறேன். உங்களது உற்சாகத்தைப் பார்க்கும்போது, ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களையும் பெற்று விடுவது உறுதியாகத் தெரிகிறது’ எனத் தாமு ஆரம்பித்தார். 

‘‘அப்துல் கலாம் உங்களுக்குத் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்’’ என்று தாமு சொன்னதும், மாணவர்கள் உடலில் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டுக் கவனிக்க ஆரம்பித்தனர். நிமிர்ந்து உட்காருங்கள்... கைதட்டுங்கள்... என்று அடுத்தடுத்த அஸ்திரங்களால், தாமு ஆசிரியராய் மாறினார். அரை மணியில் மொத்தக் கூட்டமும் வகுப்பறையாய் மாறி அவரது கட்டுக்குள் வந்து விட்டது. 

படிப்பும் பதிப்பும்
 
‘‘இந்தியா 64 சதவீத இளைஞர்களால் நிரம்பி இருக்கிறது. அவர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் நடிகர்களை ஹீரோக்களாகக் கொண்டாடுகிறீர்கள். ஆனால், உங்கள் குடும்பத்துக்கு நீங்கள்தான் ஹீரோ’’ என்று சென்டிமெண்டாக பேசினார். ‘நடிகர் விஜய் இன்றைக்கு ஐந்து பக்க வசனத்தை அப்படியே ஒப்பித்துக் கைதட்டல் வாங்க அவரது ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்தான் காரணம்’’ எனக் குரு பக்தியை ஊட்டினார் தாமு. 

“வெறும் வாளியில் அறிவு சேர்ந்தால் அறிவாளி. பிளஸ் 2 வரை நீங்கள் படிப்பது ‘லேர்னிங்’ (learning ) காக. அதற்குப் பிறகு படிப்பது அதில் ஒரு ‘எல்’லை எடுத்தால் வருகிற ‘ஏர்னிங் (earning) காக. ரோஜாவின் இதழ்கள் மலராவிட்டால் மொக்கு. மூளையின் நியூரான்கள் மலராவிட்டால் மக்கு” என்று இடையிடையே பஞ்ச் டயலாக்குகள் அடித்தார். 

‘‘படிப்பு என்பது வேண்டாம். பதிப்புதான் வேண்டும். வகுப்பில் பாடங்களைப் பதிவு செய்யுங்கள். தேர்வு எழுதும் அறைக்குச் செல்லும்போது உங்கள் ஆசிரியரையும் மனதுக்குள்ளே அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்குப் பதிலாக அவர் தேர்வை எழுதுவார். உங்கள் மனதில் இருந்து அத்தனை கேள்விகளுக்கும் அவர் பதிலை எழுதச் சொல்லித் தருவார். தேர்வு பயத்தைப் போக்கி, கொண்டாடக் கற்றுக் கொள்ளுங்கள். தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண் உங்களை உயரத்தில் கொண்டு சேர்க்கும். உங்கள் ஆசிரியருக்கு விருதுகளைப் பெற்றுத் தரும். உங்களையும், உங்கள் பெற் றோரையும் உலகம் கொண்டாடும்’’ எனத் தாமு மாணவர்களை உற்சாகமூட்டினார். 

மறு பிறவி
 
பெற்றோரை, ஆசிரியரை வணங்க வேண்டியதன் அவசியத்தை, இசையுடன் கூடிய மந்திரங்களுடன், எதிரொலிக்கத் தியான வகுப்பு நடந்தது. அதில் மாணவர்கள் கரைந்துபோயினர். 

உங்களைச் சாம்பியன்களாக்கிய ஆசிரியர்களை நீங்கள் கவுரவிக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பி, அத்தனை ஆசிரியர்களையும் மேடையில் ஏற்றிக் கவுரவித்தபோது, மாணவர்களில் பலரும், ஆசிரியர்களில் சிலரும் கண்கலங்கியது நெகிழ்ச்சி. 

நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களைப் பிள்ளைகளாய்ப் பார்க்கும் ஆசிரியர்களாய், ஆசிரியர்களைப் பெற்றோராய்ப் பார்க்கும் மாணவர்களாய் மாற்றம் பெற்று அரங்கிலிருந்து அனைவரும் வெளியேறினர். இந்தப் புரிதல் மாணவர்களை வெற்றிப் படிக்கட்டில் ஏற்றி வைக்கும் என்ற ஆசிரியர்கள், தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் இந்த முயற்சியை, பிளஸ் 2 வகுப்பின் தொடக்கத்திலும் நடத்த வேண்டும் என்றனர்.

வாழ்வின் பரிமாணத்தை உணர்த்தி மாணவர்களை மறுபிறவி எடுக்க வைத்துள்ளது இந்த நிகழ்ச்சி என்று பாராட்டினார் கல்லூரி பேராசிரியர் ஒருவர். 


ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் பி. அய்யண்ணன், ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் என்.சிவப்பிரகாசம், எஸ். சிவானந்தன், ஆர். மோகன்ராஜ், ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

கனவை நினைவாக்குவோம் 
 
நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய நடிகர் தாமு, “2020-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்; ஆசிரியர் - மாணவன் -பெற்றோரிடையே உறவு மேம்பட வேண்டும். இதனால், எதிர்கால இந்தியா சர்வ சக்தி படைத்த நாடாக மாறும் என்பதுதான் அப்துல்கலாமின் ‘லீட் இந்தியா - 2020’ன் நோக்கம்; அவரின் கனவு.
இதற்காக அவர் எழுதிய ‘மாற்றத்துக்கான மார்க்கம் இந்தியா 2020’ (manifesto for change) என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, அவரது கனவை நனவாக்க இத்தகைய முகாம்களை நடத்திவருகிறோம். வகுப்புகள் துவங்கும்போதே, மாணவர்களுக்குக் கல்வி விழிப்புணர்வு முகாம், ஆசிரியர்களுக்கு ஆற்றல் ஊட்டும் முகாம், பெற்றோர் - ஆசிரியர் ஒருங்கிணைப்பு விழாவை நடத்துகிறோம். இதன் தொடர்ச்சியாகத் தேர்வை எதிர்கொள்ளும் பயத்தில் இருந்து மாணவனை விடுவிக்க, ‘தேர்வைக் கொண்டாடுவோம்’ என்ற நிகழ்வை நடத்து கிறோம்” என்றார்.

நல்ல பேச்சே நமது மூச்சு

 
 
அலுவலகம் என்பது தொழிற்சாலையோ பொது நிறுவனமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில், நிதித் துறை, மனிதவளத் துறை, தொழில் துறை, எனப் பல துறைகள் இருக்கும். அவர்களுடன் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை மட்டும் பாதிக்கப்போவதில்லை. பலருடைய எதிர்காலமும் அதைச் சார்ந்திருக்கும். 

நம்முடன் பணிபுரியும் சகநண்பர்களுடனும் மேலதிகாரிகளுடனும், நமக்குக் கீழ் பணிபுரிபவர்களுடனும் நல்ல பெயர் எடுக்கவும், நல்ல உறவுகளை வைத்துக்கொள்ளவும் தொடர்புடைய பேச்சுத் திறன் மிகவும் முக்கியம்.
இதற்கு முக்கிய அடிப்படை நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக நீங்களே புரிந்து கொள்ளுவதும், மற்றவர்களுக்கு அதைப் புரிய வைப்பதும்தான். 

மொழியின் முக்கியத்துவம்
 
பொதுவாகத் தொடர்புடைய பேச்சுக்கு மொழி ஒரு சாதனமாகிறது.
சிலர் வெவ்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்படலாம். வெளிநாட்டு அதிகாரிகளோடு தொடர்புகொள்ள நேரிடலாம். நாம் பேசுகிற மொழி அவர்களுக்கோ, இல்லை அவர்கள் பேசுகிற மொழி நமக்கோ தெரிந்திருக்க நியாயமில்லை. அதற்கு ஒரே தீர்வு ஆங்கிலம்தான். 

பெரும்பாலான இளைஞர்கள் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. தெரிந்தாலும் மற்றவர்கள் முன்னால் பேசப் பயப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசுவது என்றாலே நல்ல இலக்கணம் தேவை என்று நினைக்கிறார்கள். 

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தாய் மொழியைத் தவறாகப் பேசுவதுதான் தவறு. ஆங்கிலத்தில், தொடக்கத்தில் தவறாகப் பேசித் தவறுகளைத் திருத்திக்கொண்டு பயிற்சி செய்து பின் ஆங்கிலத்தில் ஆளுமை வளர்த்துக் கொள்ளலாம். மொழி என்பது ஒரு சாதனமே. அதைப் பேச்சாக மாற்றி, தொடர்பு கொள்ளும்போது நல்ல உறவு உண்டாகும். 

நம் தாய்மொழி நமக்கு உயர்வானதுதான். ஆனாலும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. நீங்கள் மொழிப்பற்று உடையவராக இருந்தால் உங்களுக்கு நான் யதார்த்தமாகச் சொல்வது “ஆங்கிலத்தைப் பேச்சில் வையுங்கள். தமிழை மூச்சில் வையுங்கள்.”
இப்போதிலிருந்தே சிறிது சிறிதாக ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தொடங்குங்கள். மற்றவர்களுடைய மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள். உடன் பணிபுரிபவரின் மொழியில் பேசினால் நெருங்கிய தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு. 

கூர்ந்து கவனித்தல் 

அடுத்தவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தல் அவசியம். அந்தக் கவனம் நம் வேலையைத் திறம்படச் செய்ய உதவும். செய்யப்போகிற வேலையில் நல்ல தெளிவு கிடைக்கும். சந்தேகத்தில் செய்கிற வேலை பல பிரச்சினைகளை உண்டு பண்ணிவிடும். நமக்குப் புரிந்துவிட்டதுபோலத் தீர்மானம் செய்துகொண்டு செய்யும் வேலையில் தவறு ஏற்பட்டால், உறவுகள் முறிந்து நம் எதிர்காலம் பாதிக்கும். 

அலுவலகத்தில், கம்யூனிகேஷன் என்பது மேலதிகாரிகளிடமிருந்து கீழ் மட்டத்துக்கும், கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்துக்கும் நடக்கும். நீங்கள் ஒருவேளை மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவுகளைப் பெறலாம். சில சமயத்தில் உங்களுக்குக் கீழுள்ளவர்களுக்கு உத்தரவுகளையோ அறிவுரைகளையோ சொல்லலாம். பொதுவாக, நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் மனதில் கொள்ள வேண்டியவை: 

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்
 
#அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பேச நினைப்பது. 

#அடுத்தவர்களைக் கடிந்துவிடுவோமோ என்று நினைப்பது. 

#அலுவலக நிர்ப்பந்தங்களோ , நம்முடைய கலாச்சாரப் பாதிப்போ நம்மைத் தாக்கி, அதனால் நினைத்ததைப் பேச முடியாமல் இருப்பது. 

#எதைப் பேச நினைத்தாலும் நான் இதைச் சொல்லட்டுமா என்று பயத்துடன் பேசுவது. 

இந்த உணர்ச்சிகளை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது?
 
அலுவலகத்தில் உங்கள் உணர்வுகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்களை யாராவது புண்படுத்திவிட்டார்களா அல்லது ஏதாவது தர்மசங்கடமா அல்லது கோபமா? 

#எதுவாக இருந்தாலும் இரண்டொரு வார்த்தைகளில் முடித்து விடுங்கள். குறிப்பிட்ட எண்ணத்தை மட்டும் வெளிப்படுத்துங்கள். 

#உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காதீர்கள். 

#பேசுவதற்கான நல்ல இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுங்கள். 

#நான்தான் தவறு செய்து விட்டேன், நான்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற தொனியில் பேசுங்கள். 

பொதுவாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை,
 
#ஒருவரிடம் பேசத் தொடங்கும் முன் நம்முடைய எண்ணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். 

#எதைப் பற்றிப் பேசப் போகிறோம். ஒரு திட்டத்தைப் பற்றியா அல்லது வெறும் சந்திப்பா அல்லது யாரிடமாவது தனியாகப் பேசப் போகிறோமா என்பது மனதில் தெளிவாக இருக்கட்டும்.
#நம்பிக்கையுடன் பேசுங்கள். 

#உங்களுடைய குரலும் தொனியும் ஏற்ற இறக்கங்களோடு, பேசுகின்ற பொருளுக்கு ஏற்றாற்போல இருக்கட்டும். 

#உண்மையைப் பேசுங்கள். உங்களுடைய பேச்சு நேர்மையானதாக இருக்கட்டும். எந்த உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நேர்மையாக வெளிப்படுத்துங்கள். 

#ஒரு விஷயத்தைப் பிடிக்காமல் செய்வது, வேண்டாம் என்று சொல்வது எனக்கு உடன்பாடு இல்லை, என்று சொல்வதில் தவறில்லை. “நாம் கேட்டால், நமக்குத் தெரியவில்லை என்று நினைத்துவிடுவார்களோ அல்லது பிறர் கோபப்படுவார்களோ” என்று நினைத்து விடாதீர்கள். 

#மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பளியுங்கள். 

#நான் என்ற ஈகோவை விட்டுத் தள்ளுங்கள். 

இதைக் கவனத்தில் கொண்டால் உங்களின் பணியிடத்தில் உங்களின் பேச்சு சிறப்பானதாக மதிக்கப்படும்.

அறிவில்லாதவர் எனச் சொல்லலாமா?

  • ஸ்டீபன் வில்ஷ்ரைன் வரைந்த ஓவியம் 
     
    ஸ்டீபன் வில்ஷ்ரைன் வரைந்த ஓவியம்
  •  
     
உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பதில் தெரிந்திருந்தும் சட்டெனப் பதில் சொல்ல முடியாமல் வார்த்தைகளைத் தேடுவீர்களா? 

# நேர நிர்வாகத்தில் பின்தங்கியுள்ளீர்களா? 

# நீங்கள் பார்த்தவை நினைவில் நிற்கும்போது, கேட்டவை மறந்து போகின்றனவா? 

# நீங்கள் ஒழுங்கற்று இருப்பதாக அடிக்கடி திட்டு வாங்குவதுண்டா?
# எழுத்துப் பிழைகள் அதிகம் வருமா? 

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் ’ஆம்’ என்ற பதில் இருந்தால், ஐகியூ குறைவானர், படிப்பில் மந்தமானவர் போன்ற பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கக்கூடும். ஆனால் சோர்வடையத் தேவையில்லை. அடுத்து வரும் கேள்விகளுக்கு உற்சாகமாக ஆம் அல்லது இல்லை எனச் சொல்லுங்கள். 

# இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகள் உங்களுக்குக் கைவந்த கலையா? 

# வார்த்தைகளாகச் சிந்திக்காமல் ஒரு கதை போலச் சிந்திப்பீர்களா? 

# ஒரு புதிருக்கு எல்லோரும் ஒரு விதமான தீர்வைச் சொல்லும்போது நீங்கள் மட்டும் வித்தியாசமான தீர்வைச் சொல்லியதுண்டா? 

# ஒரே தடவைதான் ஒரு இடத்திற்குப் பயணித்திருந்தாலும் அடுத்த முறை அவ்விடத்துக்குச் செல்லும் வழியைத் துல்லியமாகச் சொல்ல முடிகிறதா? 

# புதிய கருவியைக் கண்டதும், பிரித்துப் போட்டு அதை ஆராய்ந்ததுண்டா?
இங்குள்ள அனேக கேள்விகளுக்கு ‘ஆம்’ எனச் சொல்லியிருந்தால் நீங்கள் காட்சி ரீதியான அறிவு படைத்தவர் என்று அர்த்தம். படிப்பு வராமல் காட்சி ரீதியான அறிவு இருந்து என்ன பிரயோஜனம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உளவியல் நிபுணர் கார்டனரின் ஆய்வுகள் அறிவு வெளியில் அபூர்வமான திறப்புகளுக்கு வழிகோலுகின்றன. 

1970-களில் பிராஜக்ட் சீரோ என்ற திட்டத்தில் இணைந்த கார்டனர் மனித மனத்தில் ஆற்றலைக் கண்டறியும் சோதனைகள் செய்யத் தொடங்கினார். 

இதில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், முட்டாள் என முத்திரை 
குத்தப்பட்டவர்கள், மன நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எனப் பலவிதமான மனிதர்களின் மனத்தை ஆராய்ந்துவந்தார்.
தனி மனிதரின் உளவியல் செயல்பாடுகள், நடத்தை, குணங்களை ஆராயும் சைக்கோமெட்ரிக் தேர்வு முறையைப் பின்பற்றியபோது சில ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தார். அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆடிசம், டிஸ்லெக்சியா போன்ற மனநலக் குறைபாடு உடையவர்களுக்குக் காட்சி ரீதியான அறிவுத்திறன் அபாரமாக இருக்கும் என்பது. 

உலகை மாற்றும் மாற்றுத் திறனாளிகள்
 
உளவியல் தளத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள்தான் கார்டனரை முதன் முதலில் கல்வி அமைப்பை நோக்கி நகர்த்தின. அதிலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்த போதுதான் பன்முக அறிவுத்திறன் என்ற கோட்பாடே கார்டனருக்கு உதித்தது. குறிப்பாகக் காட்சி ரீதியான அறிவுத்திறன் என்ற ஒன்று பிற அறிவுகளைச் சாராமல் தனித்து இயங்கக்கூடியது என்று அவர் கண்டறிந்தது ஆட்டிசம் உடையவர்களை ஆராய்ந்த பின்புதான். ஆட்டிசம் உடையவர்களின் காட்சி ரீதியான அறிவுத்திறனுக்கு இதோ ஓர் வாழும் உதாரணம். 

கேமரா மனிதர் 
 
பல்லாயிரம் அடி உயரத்தில் வானில் பறக்கும் ஹெலிகாப்டருக்குள் உட்கார்ந்துகொண்டு மேலிருந்து கீழே ஊரை உற்றுப்பார்க்கிறார். நதி, மலை, மரங்கள், கட்டிடங்கள் என அத்தனையும் எறும்புகள் போலத் தெரிகின்றன. சில நிமிடங்கள் ஹெலிகாப்டரில் இருந்தே பார்க்கிறார். வீடு திரும்பியதும் அவர் மனதில் பதிந்த காட்சியைத் தன் கருப்பு மை கொண்ட பேனாவால் சரசரவென வரையத் தொடங்குகிறார். சில மணித் துளிகளில் வெள்ளைப் பலகையில் நியூயார்க் நகரம் கருப்புக் கோடுகளில் எழும்புகிறது.
மீண்டும் அதே இடத்திற்குச் சென்று அவர் வரைந்த ஓவியத்தோடு ஒப்பிட்டால் ஒரு புகைப்படம் போலத் தத்ரூபமாக அத்தனை அம்சங்களையும் வரைந்திருக்கிறார். டோக்கியோ, ரோம், ஹாங்காங், துபாய், லண்டன், சிட்னி எனப் பல்வேறு பிரசித்தி பெற்ற நகரங்களை வானில் பறக்கும் பறவை போலப் பார்த்துவிட்டு சித்திரமாக வரைந்துள்ளார். மனிதக் கேமரா எனக் கொண்டாடப்படும் இவர் பெயர் ஸ்டீபன் வில்ஷ்ரைன். 

ஸ்டீபன் வில்ஷ்ரைன் கலை உலகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டி 2006-ல் பிரிட்டன் அரசு எம்பிஇ பட்டம் வழங்கியது. மூன்று வயதுவரை பேசாத ஸ்டீபன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கண்டறியப்பட்ட பின்னர் சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பேச்சு, எழுத்துத் திறன் இல்லை என்றாலும் ஸ்டீபன் ஓவிய நாட்டமுடையவர் என்பதைப் புரிந்து கொண்ட அவர் பள்ளி ஆசிரியர் அவரைப் பேசவைக்க ஒன்று செய்தார்.
ஸ்டீபனின் ஓவியப் பொருள்களை ஒளித்து வைத்துவிட்டார். எப்படியாவது ஓவியம் வரைய வேண்டும் என்ற பதைபதைப்பில் ஸ்டீபன் முதன்முதலில் பேசிய சொல், “பேப்பர்”. அப்பொழுது அவருக்கு ஒன்பது வயது. அதன் பின் அவருடைய பேச்சுத் திறனும் ஓவியத்தோடே வளர்ந்தது. 

வாசித்தல், எழுதுதல், மற்றும் கணித அறிவு இவை கைவரப் பெற்றவர்கள் கல்விக் கூடங்களில் சிறந்த மாணவர்களாகக் கொண்டாடப்படலாம். ஆனால் உலகம் இயங்க இவர்கள் மட்டும் போதாது. அறிவியல், கலை எதுவானாலும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய படைப்புகள் அபரிமிதமாக வரவேண்டும் என்றால் காட்சி ரீதியான அறிவுத்திறன் போன்ற பல்வேறு திறன்கள் போற்றி வளர்க்கப்பட வேண்டும். 

ஸ்டீபனின் மாயாஜால ஓவியத்திறனை காண https://www.youtube.com/watch?v=bsJbApZ5GF0