காப்பிய நாயகரான ராமரின் குரு விசுவாமித்திரர். அர்ஜுனனுக்கு துரோணர்.
மாவீரன் அலெக்சாண்டருக்கு அரிஸ்டாட்டில். இவர்கள் அனைவரும் முக்கியத்துவம்
பெற அடிப்படைக் காரணம் குரு - சிஷ்யன் உறவு.
ஆசிரியர்கள் உலகின் வழிகாட்டிகள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது, நமக்குத் துணை நிற்கும்.
ஆசிரியர்களிடம் பயத்தை விட்டொழிக்க வேண்டும். கேள்வி கேட்பது சந்தேகத்தை
வெளிப்படுத்தவும், பதில் சொல்வது ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையை
உணர்த்தும்.
ஆசிரியரிடம் பேசுவதற்கு முன்பாக பேச இருக்கும் விஷயத்தை நன்கு யோசித்து,
அதன் விளைவுகளையும், தெரிந்துகொண்டு அணுகலாம். பேசுவதற்கான நல்ல சூழலை
ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விஷயத்தைப் பொறுத்து வகுப்பறையிலோ,
ஆசிரியர்களுக்கான அறையிலோ பேசலாம்.
எந்தச் சூழ்நிலையிலும் பொய் பேசக்கூடாது. இயல்பாக இருக்க வேண்டும். நல்ல
பெயர் வாங்க குணாதிசயங்களைச் செயற்கையாக மாற்றிக் கொள்ளக்கூடாது.
அவர் உங்களை விமர்சனம் செய்தாலோ அல்லது குறைகூறினாலோ தவறாக நினைக்க
வேண்டாம். ஒரு மாணவனைப் பற்றியோ மற்ற ஆசிரியர்களைப் பற்றியோ குறை கூற
வேண்டாம்.
நேற்று நடத்திய பாடங்களைப் பற்றி ஆசிரியர் கேட்கும்போது எதைப் புரிந்து
கொண்டீர்கள், எது உங்களுக்குச் சவாலாக அமைந்தது என்று கூறுங்கள்.
உங்களுடைய கண், உடல் மொழி அவரிடம் பேசுவதில் உள்ள அக்கறையை வெளிப்படுத்த வேண்டும்.
அதேபோல நீங்கள் கையாள்கிற மொழியில் சிக்கல் இருக்கலாம். எந்த மொழியில் பேசப் போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருங்கள். உங்களுடைய நடை, உடை, பேச்சு,
பாவனை எல்லாமே படிப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம் என்று
வெளிப்படுத்துவதாக இருக்கட்டும்.
நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றியது ஆசிரியர்கள்தான். பெரும் தலைவர்கள்
பெரும்பாலோர் ஆசிரியர்களே. அது மட்டுமல்ல, உங்களுடைய அறிவை மற்றவர்களுடன்
பகிர்ந்துகொள்ளும்போது நீங்களும் ஆசிரியர்கள்தான்.
No comments:
Post a Comment