இயற்கை அறிவியலின் அடிப்படையான துறை இயற்பியல். அதில் அணு, மூலக்கூறு ஆகிய
அடிப்படையான விஷயங்கள் அலசப்படுகின்றன. எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படை
அணுவே. அணுவின்றி எதுவும் இல்லையே. ஆகவே அந்த அணுவின் அடிப்படைகளை அலசும்
அறிவியல் பிரிவுக்கு நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது அதிசயம் அல்ல.
யாருக்கு முதல் நோபல் பரிசை வழங்கலாம் என்று ஆலோசித்தபோது நோபல்
குழுவினருடைய மனதில் வந்த பெயர் 1895-ல் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்த
வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென். 1901-ம் ஆண்டில் டிசம்பர் 10 அன்று அவர்
நோபல் விருதைப் பெற்றுக்கொண்டார். அப்போது அவர் முனிச் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
ராண்ட்ஜென் கதிர்கள் என அழைக்கப்படும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்து
அவர் இயற்பியல் துறைக்கு ஆற்றிய சேவையைக் கவுரவிக்கும் விதமாக அவருக்கு
இயற்பியல் துறையின் முதல் நோபல் விருது அளிக்கப்பட்டது. அந்தக் காலத்தில்
அவர் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டறிந்தபோது அந்தக் கதிர்கள் மனிதர்களின்
சருமத்தையும் துணிகளையும் ஊடுருவும் என்று பத்திரிகைகளில் செய்திகள்
வெளியாயின. எக்ஸ்ரே குறித்து மனிதர்களிடையே ஒரு மர்மான எதிர்பார்ப்பு
உருவாகியது.
1845-ம் ஆண்டு மார்ச் 27 அன்று ஜெர்மனியின் லென்னெப் என்னுமிடத்தில் பிறந்த
ராண்ட்ஜென் உலகின் வெளிச்சத்தில் பவனி வந்தவரல்ல. அவருக்கு
வெளியுலகத்திற்கு வர நேரமே இருந்ததில்லை. அதிகம் அறியப்படாதவர் அவர்.
அறிவியல் கருத்தரங்குகளில்கூட அவர் அதிகமாகக் கலந்துகொண்டதில்லை; ஆய்வுக்
கட்டுரைகளைச் சமர்ப்பித்ததில்லை. எக்ஸ்ரே கதிர்களைக் கண்டறிந்த பின்னரே
அவர்மீது ஊடக வெளிச்சம் விழத் தொடங்கியது.
1895 நவம்பர் 8 அன்று அவர் தனது ஆய்வகத்தில், கேதோடு ரே குழாயிலிருந்து
எப்படி ஒளி உமிழப்படுகிறது என்ற ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது
கேதோடு ரே குழாயிலிருந்து தூரத்தில் உள்ள ஒளிரும் திரையில் ஒரு பளபளப்பு
தோன்றியது. அதற்குக் காரணம் கேதோடு கதிர் குழாயிலிருந்து வெளியேறும் ஏதோ
ஒரு கதிர் என்று உணர்ந்தார். அதனால் ராண்ட்ஜென் ஆச்சரியத்தில் அப்படியே
உறைந்துவிட்டார்.
ஒளிரும் திரையில் பளபளப்பை உருவாக்கும் அந்தக் கண்ணுக்குத் தெரியாத கதிர்
எது என்பதைக் கண்டறியும் ஆவலில் பல வாரங்களாக அவர் ஆய்வகத்தை விட்டு வெளியே
வரவில்லை. இறுதியில் அதன் காரணம் எக்ஸ்ரே கதிர்களே என்பதைக் கண்டறிந்தார்.
அவற்றுக்கு அசாதாரணமான ஊடுருவும் தன்மை இருப்பதையும் அந்தக் கதிர்களை
போட்டோஎலக்ட்ரிக் தகடுகளில் பதிவுசெய்ய முடியும் என்பதையும்
கண்டுபிடித்தார்.
அறியாத எண்ணை எக்ஸ் எனக் குறிப்பிடும் வழக்கம் கணிதத்தில் இருந்தது. எனவே
அந்தக் கதிரை எக்ஸ் கதிர் என அவர் அழைத்தார். இப்படி எதிர்பாராதவிதமாக
ராண்ட்ஜென் கண்டுபிடித்த எக்ஸ்ரே கதிர் தான் அவருக்கு நோபல் பரிசையே
வாங்கிக்கொடுத்தது என்பது ஆச்சரியம் கலந்த உண்மையே.
No comments:
Post a Comment