Thursday, 1 January 2015

தேர்வைக் கொண்டாடுவோம்

 
 
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்காக, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் நடந்த ‘தேர்வைக் கொண்டாடுவோம்’ நிகழ்ச்சியில் உற்சாகம் பொங்கி வழிந்தது. 

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ‘லீட் இந்தியா 2020’ எனும் தேசிய இயக்கத்தை நடத்துகிறார். அதன் சார்பில் நடிகர் தாமு இதில் பங்கேற்றார்.
‘மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே இடத்தில் பார்க்கிறேன். உங்களது உற்சாகத்தைப் பார்க்கும்போது, ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களையும் பெற்று விடுவது உறுதியாகத் தெரிகிறது’ எனத் தாமு ஆரம்பித்தார். 

‘‘அப்துல் கலாம் உங்களுக்குத் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்’’ என்று தாமு சொன்னதும், மாணவர்கள் உடலில் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டுக் கவனிக்க ஆரம்பித்தனர். நிமிர்ந்து உட்காருங்கள்... கைதட்டுங்கள்... என்று அடுத்தடுத்த அஸ்திரங்களால், தாமு ஆசிரியராய் மாறினார். அரை மணியில் மொத்தக் கூட்டமும் வகுப்பறையாய் மாறி அவரது கட்டுக்குள் வந்து விட்டது. 

படிப்பும் பதிப்பும்
 
‘‘இந்தியா 64 சதவீத இளைஞர்களால் நிரம்பி இருக்கிறது. அவர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் நடிகர்களை ஹீரோக்களாகக் கொண்டாடுகிறீர்கள். ஆனால், உங்கள் குடும்பத்துக்கு நீங்கள்தான் ஹீரோ’’ என்று சென்டிமெண்டாக பேசினார். ‘நடிகர் விஜய் இன்றைக்கு ஐந்து பக்க வசனத்தை அப்படியே ஒப்பித்துக் கைதட்டல் வாங்க அவரது ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்தான் காரணம்’’ எனக் குரு பக்தியை ஊட்டினார் தாமு. 

“வெறும் வாளியில் அறிவு சேர்ந்தால் அறிவாளி. பிளஸ் 2 வரை நீங்கள் படிப்பது ‘லேர்னிங்’ (learning ) காக. அதற்குப் பிறகு படிப்பது அதில் ஒரு ‘எல்’லை எடுத்தால் வருகிற ‘ஏர்னிங் (earning) காக. ரோஜாவின் இதழ்கள் மலராவிட்டால் மொக்கு. மூளையின் நியூரான்கள் மலராவிட்டால் மக்கு” என்று இடையிடையே பஞ்ச் டயலாக்குகள் அடித்தார். 

‘‘படிப்பு என்பது வேண்டாம். பதிப்புதான் வேண்டும். வகுப்பில் பாடங்களைப் பதிவு செய்யுங்கள். தேர்வு எழுதும் அறைக்குச் செல்லும்போது உங்கள் ஆசிரியரையும் மனதுக்குள்ளே அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்குப் பதிலாக அவர் தேர்வை எழுதுவார். உங்கள் மனதில் இருந்து அத்தனை கேள்விகளுக்கும் அவர் பதிலை எழுதச் சொல்லித் தருவார். தேர்வு பயத்தைப் போக்கி, கொண்டாடக் கற்றுக் கொள்ளுங்கள். தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண் உங்களை உயரத்தில் கொண்டு சேர்க்கும். உங்கள் ஆசிரியருக்கு விருதுகளைப் பெற்றுத் தரும். உங்களையும், உங்கள் பெற் றோரையும் உலகம் கொண்டாடும்’’ எனத் தாமு மாணவர்களை உற்சாகமூட்டினார். 

மறு பிறவி
 
பெற்றோரை, ஆசிரியரை வணங்க வேண்டியதன் அவசியத்தை, இசையுடன் கூடிய மந்திரங்களுடன், எதிரொலிக்கத் தியான வகுப்பு நடந்தது. அதில் மாணவர்கள் கரைந்துபோயினர். 

உங்களைச் சாம்பியன்களாக்கிய ஆசிரியர்களை நீங்கள் கவுரவிக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பி, அத்தனை ஆசிரியர்களையும் மேடையில் ஏற்றிக் கவுரவித்தபோது, மாணவர்களில் பலரும், ஆசிரியர்களில் சிலரும் கண்கலங்கியது நெகிழ்ச்சி. 

நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களைப் பிள்ளைகளாய்ப் பார்க்கும் ஆசிரியர்களாய், ஆசிரியர்களைப் பெற்றோராய்ப் பார்க்கும் மாணவர்களாய் மாற்றம் பெற்று அரங்கிலிருந்து அனைவரும் வெளியேறினர். இந்தப் புரிதல் மாணவர்களை வெற்றிப் படிக்கட்டில் ஏற்றி வைக்கும் என்ற ஆசிரியர்கள், தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் இந்த முயற்சியை, பிளஸ் 2 வகுப்பின் தொடக்கத்திலும் நடத்த வேண்டும் என்றனர்.

வாழ்வின் பரிமாணத்தை உணர்த்தி மாணவர்களை மறுபிறவி எடுக்க வைத்துள்ளது இந்த நிகழ்ச்சி என்று பாராட்டினார் கல்லூரி பேராசிரியர் ஒருவர். 


ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் பி. அய்யண்ணன், ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் என்.சிவப்பிரகாசம், எஸ். சிவானந்தன், ஆர். மோகன்ராஜ், ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

கனவை நினைவாக்குவோம் 
 
நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய நடிகர் தாமு, “2020-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்; ஆசிரியர் - மாணவன் -பெற்றோரிடையே உறவு மேம்பட வேண்டும். இதனால், எதிர்கால இந்தியா சர்வ சக்தி படைத்த நாடாக மாறும் என்பதுதான் அப்துல்கலாமின் ‘லீட் இந்தியா - 2020’ன் நோக்கம்; அவரின் கனவு.
இதற்காக அவர் எழுதிய ‘மாற்றத்துக்கான மார்க்கம் இந்தியா 2020’ (manifesto for change) என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, அவரது கனவை நனவாக்க இத்தகைய முகாம்களை நடத்திவருகிறோம். வகுப்புகள் துவங்கும்போதே, மாணவர்களுக்குக் கல்வி விழிப்புணர்வு முகாம், ஆசிரியர்களுக்கு ஆற்றல் ஊட்டும் முகாம், பெற்றோர் - ஆசிரியர் ஒருங்கிணைப்பு விழாவை நடத்துகிறோம். இதன் தொடர்ச்சியாகத் தேர்வை எதிர்கொள்ளும் பயத்தில் இருந்து மாணவனை விடுவிக்க, ‘தேர்வைக் கொண்டாடுவோம்’ என்ற நிகழ்வை நடத்து கிறோம்” என்றார்.

No comments:

Post a Comment